- கற்ற கலைகள் பல ஆயினும் எவையும் நம்மை காக்காது. கலைகளுக்கெல்லாம் கர்த்தாவாகிய காஞ்சி காமாட்சியின் திருப்பாதம் சரண் அடைவதே உய்வதற்க்கு ஒரே வழியாகும்.
- எத்தனை முறை சென்று தரிசித்தாலும், திகட்டாத தெவிட்டாத தேனமுது அவள்.
- இன்னும் ஈராயிரம் பிறவிகள் எடுப்பதற்க்கும் நான் விழைகின்றேன்! உன் காலடியில், எப்போதும் நான் இருப்பதானால்
- தாயே உன் காலடியில் தான் மூவுலகங்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அலைவரிசையில் இயங்குகின்றன. இதனை உன் திருவருளால் நான் உணர்ந்தேன். மூவுலகத்திலும் உன்னை போற்றி கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பதையும் நான் உன்னால் உணர்ந்தேன்.
- மகான்கள், ஞானிகள், ரிஷிகள் எதனை இறையாக தன்னிடத்தில் உணர்கின்றனரோ, அது உன்னை சுற்றி எங்கும் வியாபித்துள்ளது. அதனால் தான் நானும், கள் குடித்த மாந்தரை போன்று உன்னை சுற்றி கொண்டிருக்கிறேன், தாயே!
- உனக்கும் எனக்கும் எவ்விடத்தில் சம்பந்தம் உண்டாயிற்று? நான் பிச்சைக்காரனாய் உன் சன்னிதானத்தில் நின்ற போதா? அல்லது அதற்கும் முன் நிர்வானியாய் காசியில் கங்கை கரையில் மௌனத்தில் ஆழ்ந்திருந்த போதா..? சொல் என்னவளே காமாட்சியே !!
- ஆதியும் அந்தமும் அற்ற, பகலும் இரவும் அற்ற, பிறப்பும் இறப்பும் அற்ற சுத்த சூன்ய வெளியில் சுழன்று கொண்டிருக்கும் என் காமாட்சியே! உன் குழந்தைகளாகிய எங்களையும் அவ்விடத்திற்க்கு அழைத்து செல்க!!
- காதல் என்ற பாற்கவர்ச்சியில் மூழ்கும் வீணர்களே!! ஒரு முறை நீங்கள் என் காமாட்சியின் கண்களை காணுங்கள். தேன் குடித்து மயங்கி கிடக்கும் வண்டை போல அவள் காலடியில் வீழ்ந்து கிடப்பீர்கள் !! என்னைப் போல!!